|
பொ-ரை: முத்தனே! முதல்வா! முகிழ்க்கும் முளையை ஒத்தவனே! ஒப்பற்றவனே! உருவத்திருமேனி உடைய சித்தனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் அத்தனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக. கு-ரை: முத்தன் - அநாதிமல முத்தன். முதல்வன் - உலகிற்குப்பரம ஆதாரமாய் நின்று அதனைத் தன் சக்தி சங்கற்பத்தால் மாயையினின்று தோற்றி நிறுத்தி ஒடுக்குவோன். முகிழ்க்கும் முளை ஒத்தல் - அறநெறி நிற்பார் உள்ளத்தில் அவ்வறத்திற்கு முதலாக விளங்கித்தோன்றலும், சிவஞானியர் உணர்வில் முன்னர்ப் பேருணர்வாயும் பின்னர் இன்ப உருவாயும் முகிழ்த்து வளர்தல். 'சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது' என்னுந் திருமந்திரம் ஒப்புநோக்கத்தக்கது. ஒருவன், முன்னர் விளக்கப்பட்டது. சித்தன் - எல்லாம் வல்லவன் (வித்தகசித்தர் போல வேண்டுருக் கொள்ளவல்லான்). |