பாடல் எண் : 13 - 7
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.
7
பொ-ரை: வானவர் தமக்குரிய நீதிப்படி நித்தலும் நியமங்கள் செய்து ஓதியும் அவர்களால் உணரப்படாது நின்ற ஒப்பற்ற வேதியா! விகிர்தனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஆதியே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
கு-ரை: நீதிவானவர் - நீதியால் உயர்ந்த பெரியோர் எனினும் பொருந்தும். நித்தல் - நாடோறும். நியமம்செய்து - முறையாக வழிபடுதலைச் செய்து. ஓதி(யும்) உணராததோர் வேதியா என இயைக்க. வேதியா - வேதம் விரித்தவனே. ஆதி - முதல்வனே.