|
பொ-ரை: நின்னடியைப் பழகிச் சூடிய பாலனாகிய மார்க்கண்டேயனை வஞ்சனையால் பற்றமுற்பட்ட காலனைச் சாடிய அழகனே!அழகுமிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குழகனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக. கு-ரை: பழகி - உனக்குப் பூசைசெய்யும் அணுக்கத் தொண்டுரிமையோடு நெருங்கிப் பழகி. அடிசூடிய - திருவடிகளைத் திருமுடியில் சூடிக்கொண்டவராகிய. பாலனை - மார்கண்டேயனை. கழகு - சூது; கழகின்மேல்வைத்த - வஞ்சனையாற்பற்ற எண்ணிய. சாடிய - உதைத்த. குழகன் - இளமையுடையோன். |