|
பொ-ரை: பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு, புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம். கு-ரை: பாசம் - உலகப்பற்று. ஒன்று - சிறிதேனும் என்னும் பொருட்டு. இலராய் - இல்லாதவராய். பத்தர்கள் - அன்பர்கள். நாண்மலர் - அன்றலர்ந்த புதுமலர். அடி - இறைவன் திருவடிகளை. வைகலும் - நாள்தோறும் (வழிபடும்) ஈசனாகிய எம்பெருமானின் இடைமருது என்க. புகுதும் - செல்வோம். பூசப் புனலாட நாம் புகுதும் எனக் கூட்டுக. திருவிடைமருதூரில் தைப்பூசத் திருநாள் சிறந்ததாதலை இன்றும் காண்க. (தைப்பூசம் முதல்வன் தீர்த்தம் தரும் நாள்). |