பாடல் எண் : 14 - 10
கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.
10
பொ-ரை: இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன், தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி, கட்டிபட்ட கரும்பு, குளிர்மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள், தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன்.
தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செவ்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம்.
கு-ரை: இனியன் என்பதைக் கனி கரும்பு முதலியவற்றோடு தனித்தனி கூட்டுக. கட்டிபட்ட கரும்பு - கட்டியாகிய கரும்புச்சாறு; வெல்லம். பனிமலர்க்குழல் - இளமையை அறிவித்தது. பாவை நல்லார் - பதுமைபோன்றழகிய பெண்கள். தனிமுடி கவித்தாளும் அரசு - நிலம் பொது எனல் இன்றி உலகிற்கு ஒரே அரசனாய் மகுடம் சூடி ஆட்சிசெய்யும் அரசுரிமை. தன்னடைந்தார்க்கு - தன்னையே சரண் என்றடைந்த ஞானியர்க்கு. இப்பாடலில் கூறும் நான்கு பொருள்களும் குழந்தை இளைஞர் குமாரர் முதியர் என்பார்க்கு இனிமை பயப்பன. இந்நான்கு தரத்தினர்க்கும் அப்பொருள்களின் மேலான இன்பம் செய்பவன் என்ற நயப்பொருள் காண்க.