பாடல் எண் : 14 - 5
வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கு மிடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.
5
பொ-ரை: வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க்கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும்.
கு-ரை: வண்டணைந்தனவாகிய வன்னியும் கொன்றையும் கொண்டு என்க. அணிந்த - சூடிய. எண்டிசைக்கும் இடைமருதா - எட்டுத்திசைகளுக்கும் தலைவனாய் விளங்கும் இடைமருதனே. விண்டுபோயறும் - நம்மைவிட்டு நீங்கி ஒழியும். மேலைவினைகள் - பழவினைகள். படர்க்கையின் வைத்துப் பரவியும் முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபடின் மேலைவினைகள் விண்டு போய் அறும் என்க; நம்மைப் பற்றுதல் நெகிழ்ந்து சேய்மைக்கண் விலகிப் பின் இல்லையாய்க் கெடும்.