|
பொ-ரை: மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும், குற்றமற்ற ஒளிவடிவானவனும், மிக்க இளமதியைச் சூடியவனும், எனக்குத் தாயானவனும், எம்மானும் இடைமருதூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனை நினைத்திட்டு அன்பு ஊறி என் உள்ளம் நிறைந்தது. கு-ரை: மனத்துள் - மனத்திற்குள். மாயன் - வெளிப்படையாக இன்றி மறைந்து வீற்றிருக்கும் மாயத்தன்மையை உடையவன். புனிறு - மிக்க இளமை. பிள்ளை வெள்ளைமதி - குழவித் திங்களாகிய வெண்மை பொருந்திய மதி. எம்மான் - தலைவன். நினைத்தலால் அன்பு ஊறி உள்ளத்தின்கண்ணே நிறைந்து நிற்கின்றது என்க. |