பாடல் எண் : 15 - 4
துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோ
டணைய லாவ தெமக்கரி தேயெனா
இணையி லாவிடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.
4
பொ-ரை: ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின், தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர்.
கு-ரை: முதல்வன் என்னும் எழுவாய் வருவித்துரைக்க. துணையிலாமையில் - ஊழிக்காலத்து வேறொருவர் தமக்குத் துணையாக இல்லையாதலால். தூங்கிருள் - கழியாது தாழ்க்கும் இருளில். பேய்களோடு அணையலாவது - பேய்களோடு கூடியணைந்து நடமாடிக் காலங்கழித்தல். அரிதே எனா - எமக்கு அரியதானதே என்று. இணையிலா - ஒப்பில்லாத. இடைமாமருதில் எழு - இடைமருதில்தோன்றியுள்ள. பணையில் - மருத மரத்தடியில் (பணை - மருதநிலம், அஃது அந்நிலத்துக்குரிய மரத்துக்கு ஆயிற்று) தன் பங்கிக்கு - தன் பாகத்தே உள்ள பெருமாட்டிக்கு; அல்லது தனக்கு மனைவியாம் பாங்கு உடையாளுக்கு. ஆகமப் பொருள்களைச் சொல்லும் - ஓதிக் கொண்டிருக்கிறான். இப் பாடல் நகைச்சுவையமைந்தது. இடைமருதில் பெருமான் எழுந்தருளியுள்ளதற்கு ஒரு வினோதமான காரணம் கூறியவாறு. (1) இடைமருது - ஊழிக்காலத்து அழியாதது, (2) ஊழியில் இறைவனும் அம்மையும் பேய்களும் அன்றிப் பிறர் இரார், (3) ஆகமம் அம்மைக்கே முதற்கண் உரைக்கப் படுவது என்பன விளங்குதல் காண்க.