|
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர், மறையை ஓதுவர்; மான்குட்டியை யேந்திய கையினர்; திருநீலகண்டர்; கபாலத்தைக் கொண்ட கையினர்; எத்துறையும் போகுவர்; தூய வெண்ணீற்றினர்; பிறையும் சூடும் இயல்பினராவர். கு-ரை: மறை ஓதுதல் முதலியவை, பிறர் ஒருவருக்கும் இல்லாத பெருமை சிவபிரான் ஒருவனுக்கே உண்டு என்பதை உணர்த்தும் உண்மையாம் பெரிய நல்லடையாளங்கள் ஆகும் என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும். மறை ஓதுதல், முதல்வன் உலகிற்குப் பொய் தீர ஒழுக்கநெறி வகுத்தவன் என்பதைக் குறிக்கும். மான்மறி ஏந்துதல் - வேதத்திற்கு நாதன் என்பதைக் குறிக்கும். "வேதமான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நான் என நவிற்றும் ஆறே" (தி.11.திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பா. 6) கறைகொள்கண்டம் - முதல்வன்றன் பேரருள் உடைமையினையும், யாரையும் எவற்றையும் தன்வயப் படுத்தும் செம்பொருட்டன்மையினையும் குறிக்கும். கபாலியார் - பிரமகபாலம் ஏந்தியவர். இஃது உயிர்களுக்கு உள்ள யான் எனது என்னும் செருக்கு அறுத்து இன்பூட்ட வல்லான் என்பதைக் குறிக்கும். துறை போதல் - கரையைச் சென்று அடைதல், அல்லது, முற்றக்கற்றல். எனவே,முதல்வன் எக்கலைக்கும் முதற் கருத்தாவாய் இயற்கை முற்றுணர்வு உடையன் என்பதைக் குறித்தபடி. பிறை சூடுதல் உயிர்களின் அக இருளைப் படிமுறையான் போக்கும் தூய நல்லுணர்வைத் தன் பக்கல் உடையன் என்பதைக் குறிக்கும். "தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி - ஆமதி யான் என அமைத்த ஆறே" (தி. 11 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பா.6) என்பதனான் உணர்க. இனத்துச் சார்ந்தார்க்குச் சார்பாய் நின்று தலையளி செய்வோன் என்பதைக் குறிக்கும் எனினும் அமையும். உம்மை எண்ணுப் பொருளில் வந்தது. துறையும் போகுவர் என்றது 'ஈசானஸ் ஸர்வ வித்யானாம்' என்னும் வேதமந்திரத்தின் கருத்தைத் தருவதாதல் காண்க. எக்கலைக்கும் முதல்வன் (சிவபிரான்) என்பது அம் மந்திரத்தின் பொருள். |