|
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர், படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர்; அம்பறாத்தூணி உடையவராய் (வேடராய்) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர்; பிரமசாரியாய் வந்து (வாமனாவதார காலத்து) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர். கு-ரை: பாணி - இசைப்பாட்டு. படுதம் - கூத்துவகை. பேணியார் - பேணி வழிபடப்பட்டவர். இசைப் பாட்டோடு படுதம் என்னும் கூத்தாடுவாரும், தூணியாராய் விசயற்கு அருளியோரும் பேணப்பட்டோரும் ஆகிய அவர் பேரெயிலாளர் என முடிக்க. |