பாடல் எண் : 16 - 9
நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.
9
பொ-ரை: கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர்; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர்.
கு-ரை: புன்சடையா எனா - தவக்கோலம் பூண்ட பெருமானே எனப் போற்றித் தொழாது. மாறுபட்டுப் பூங்கணை எய்த. எனாத என்பது எனா என நின்றது. அநங்கன் - மன்மதன். வார் உலாவும் வன (அழகிய) முலையாளொடும் பேரெயிலில் உள்ளவர் அநங்கன் திறலை வாட்டியபேர் உளார் என முடிக்க. "ஓம் காமாரயே நம" என்பது நூற்றெட்டுப் பெயர்களுள் ஒன்று.