|
பொ-ரை: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் பூங்கொத்தினை, சுடரை, சுடர்போல் ஒளி உடைய பித்தனை, கொல்லும் நஞ்சு போல்பவனை, வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது. கு-ரை: முளைத்த - எல்லார்க்கும் முன்னே தோன்றிய. எம் தொத்தினை - எங்கள் கொத்தினை; உறுப்புக்கள் பல மலராக அமைந்த பூங்கொத்துப் போன்றவன் என்க. சுடரை - ஒளிவடிவானவனை. அல்லது சூரிய சந்திரர்களாகவும் நெருப்பாகவும் விளங்குகின்றவனை என்க. சுடர்போல் - சூரிய சந்திரர்கள் போல அன்பர்க்குச் சந்திரனைப் போன்றவனாகவும் (அல்லாதவர்க்குச் சூரியன் போன்றவனாகவும் இருப்பவன்). ஒளிப்பித்தனை - ஒளியையுடைய அடியர்மாட்டுப் பேரன்புடையானை. பித்தினை என்பதும் பாடம்; பேரன்புக்குக் கோசரமாவன் என்பது கருத்து. கொலும் நஞ்சினை - அல்லார்க்கு நஞ்சுபோல்வான். வானவர் நித்தன் - வானவர் அமர நிலை எய்தச்செய்தவன். நெருநல் - நேற்று. கண்ட - தரிசித்த. வெண்ணியிதுஎன்று ஒருசொல் கூட்டி முடிக்க. அல்லது கண்டது என்று வினைமுற்றாக்கியும் முடிபுரைக்கலாம். முன் நாள் கண்டகாட்சி உள்ளத்தே நின்று களிப்பைத்தர அதனாற் பாடியது இத்திருப்பதிகம் எனக் கொள்க: அடுத்த பாட்டின் கருத்தும் காண்க. |