பாடல் எண் : 17 - 11
இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்திறல் வாட்டினார்
சிலையி னால்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னால்தொழு வார்வினை தாவுமே.
11
பொ-ரை: இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார். வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும்.
கு-ரை: இலையினார் - அடியார் இடும் வில்வம் வன்னி முதலிய பச்சிலைகளைச் சூடியவர். திறல் - வலிமை. சிலை - வில்.தலையினால் தொழுதல் - தலைதாழ்த்தி வணங்குதல். தாவும் - கெடும், ஒழியும்; தபு - என்பதன் அடியில் தோன்றியது.
குறிப்பு: இத் திருப்பதிகம் அப்பர் பெருமான் அள்ளூறித் தித்திக்கப் பாடியது: இக்ஷுபுரி என்னும் பெயர் இதனால் வந்தது போலும். இறைவன் திருவுரு கரும்பின் அடையாளம் உடைத்து என்பர்.