பாடல் எண் : 17 - 3
காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடும்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.
3
பொ-ரை: காற்றும் கனலும் ஆவான்; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான்; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன். கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன். இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது.
கு-ரை: காற்றினை - காற்று வடிவானவனை. கனலை - அனல் வடிவினனை. கதிர்மாமணி - ஒளியையுடைய சிறந்தமணி போன்றவனை. நினைப்பார் - தன்னை நினைப்பாரின். வினை நீக்கிடும் - வினைகளைப்போக்கும். நீற்றினை - திருநீறணிந்தவனை - அல்லது; நினைப்பவர் வினையை நீறாக்கியவனை என்க. குணமுடை - அபயமாக அடைந்தவரைக் காக்கும் குணமுடைய. வீற்றினை - வீறு. பெருமை - பெருமை வடிவினனை. "தொழுதெழுவார் வினை வளம் நீறெழ நீறணியம்பலவன்" என்னும் (தி.8) திருக்கோவையார் ஒப்பிடத்தக்கது.