|
பொ-ரை: எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும், அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும், கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள். (செவிலி கூற்று). கு-ரை: முற்றலா - முழுதும் எழாத; இளைய. எங்கள் பேதை இவள் - பேதைப்பருவம் உள்ள எங்கள் மகள். அற்றம் தீர்க்கும் அறிவு - தலைவன் துன்பத்தைப் போக்கும் காம உணர்வு. அற்றம் - துன்பம். முற்றிலா முலையாள், அறிவிலள் என்றது இளையள், பேதை, காமஞ்சாலாதவள் என்றபடி. ஆகிலும் - அங்ஙனமிருந்தாலும். கற்றைச் செஞ்சடை - அடர்ந்த செஞ்சடைக் கற்றை. ஊர்திபெற்றம் - வாகனம் எருது. கடம்பந்துறைக் கற்றைச் செஞ்சடையான் ஊர்திபெற்றம் என மாறுக. என்றாள் -காமஞ்சாலா இளையோளாய எமது மகள் இறைவனைக் கண்டு காதலித்து அவன்றன் அடையாளம் கூறத் தொடங்கிவிட்டாள் என்பதாம். உலாப்புறம் போந்த முதல்வனைக் கண்ட பேதைப் பருவப் பெண் அவன்றன் திருவுருவில் உளங்கொடுத்தாள் என்க. |