பாடல் எண் : 18 - 5
மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே.
5
பொ-ரை: உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக.
கு-ரை: மறைகொண்ட மனத்தான் - உபதேசப் பொருளைச் சிந்தித்தல்கொண்ட மனத்தை உடையவன். மறை - உபதேசப் பொருள் (இரகசியம்) மனத்துள் - உள்மனத்தின்கண். நிறைகொண்ட - நிறை என்னும் குணம் கொண்ட; நிறுத்துதல் அமைந்த. அ - அழகிய. நெஞ்சினுள் - உள்மனமாகிய நெஞ்சின் கண் எனக் கூட்டுக . உற - பொருந்த. வைம்மின் - வைத்து வழிபடுங்கள், ஓ - அசை. கறை - விடக்கறை. சிறைகொண்ட வினை - உயிர்களின் அறிவைச் சிறைப்படுத்துதலைக் கொண்டிருக்கும் வினைகள். மனத்தை ஒரு நெறிப்படித்தி உபதேசப் பொருளில் வைத்து முதல்வனைச் சிந்தித்துணர்வார்க்கு வினைக்கட்டு நீங்கி வியாபக உணர்வு வெளிப்படும் என்றபடி.