பாடல் எண் : 19 - 1
தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.
1
பொ-ரை: தளருகின்ற கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு, குளிர்ந்த பிறைமதி வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம், பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு அறாத, கரிய கடம்பு நிறைந்த ஊரில் திருக்கரக் கோயிலே.
கு-ரை: தளரும் - வளையும். கோள் அரவம் - விழுங்குதலை உடைய பாம்பு. தண்மதி - குளிர்ந்த பிறைமதி. வளரும் - தங்கும். கோலம் - அழகிய. வளர்சடையார்க்கு - வளர்கின்ற சடையை உடையவர்க்கு. கிளரும் - விளங்கும். பேரிசை - மிக்க இசையினை உடையதாகிய. கின்னரம் - ஒருவாச்சியம்.
அறா - நீங்காத. களரும் - கறஉப்பு நிறமுடையதாய. கார் - கார்காலத்தே மலரும். கடம்பூர் - கடம்ப மரங்கள் செறிந்த ஊர். கரக்கோயில் - ஒரு வகை அமைப்பினை உடைய கோயில்; இந்திரன் தன் கரத்தால் அகழ்ந்து மூர்த்தியை எடுத்துப் பொன்னுலகத்து வைக்க முயன்றமையைக் குறிக்கும் என்பாரும் உளர்.