பாடல் எண் : 19 - 2
வெலவ லான்புல னைந்தொடு வேதமும்
சொலவ லான்சுழ லூந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் தோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.
2
பொ-ரை: கடம்பூர்த் திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன்; வேதமும் சொல்லவல்லவன்; சுழல்கின்ற தடுமாற்றமும் நீக்க வல்லவன்: மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக் கலத்தல் வல்லவன்.
கு-ரை: பலன் ஐந்தொடு - ஐம்புலன்களோடு ஏனைய பகைவர்க்கங்களையும். வெலவலான் - வெல்லவல்லவன், வேதமும் - எண்ணும் எழுத்தும் உலகிற்குச் சொல்லியதோடன்றி வேதங்களையும். சொலவலான் - சொல்லவல்லவன். சுழலும் தடுமாற்றமும் - சுழற்சியாகிய அறியாமை மயக்கமும் ஐயுறவும். அலவலான் - இயல்பாகவே நீங்கியவன்; (நீக்கவல்லவன்), மனையார்ந்த - தனது வீட்டின்கண்ணே தங்கியுள்ள. மென்தோளியை - மெல்லிய தோளை உடையபார்வதியை. கலவலான் - கலத்தல் வல்லவன்.