பாடல் எண் : 19 - 3
பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவ ரெள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.
3
பொ-ரை: உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து, அவ்வாறு எழுவார் பணியினையும் உடன்செய்து கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும்.
கு-ரை: பொய்தொழாது - பொய்யான பொருள்களுக்கு அடிமைப்படாது; உலகப்பற்றுவிட்டு. புலிஉரியோன் - புலித்தோல் உடுத்த சிவபிரான். வைது எழாது எழுவார் என்க, நீர், சிவபிரான் பணியைச் செய்யாநின்று எழுந்து, அங்ஙனம் எழுவாராகிய நும்போன்ற அன்பர் பணியினையும் செய்யாநின்று எழுந்து, திருக்கரக்கோயிலைக் கைதொழுது மேல் ஓங்குமின் எனமுடிக்க. பணிசெய்தெழா - துயில் உணரும்போது, சிவன் பணி அன்பர் பணி இரண்டையும் சிந்தித்தபடியே உணர்ந்து என்றபடி. வைது எழாது எழுவார் - இறைவனை இகழ்ந்து உணர்வின்றியே எழும் அறிவிலிகள். அவர் நும்மை இகழ்தல் இயல்பு என்றபடி.