|
பொ-ரை: கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல்; என் போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல். கு-ரை: நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும். கடம்பமலர் சூடும் முருகன். பெற்றவள்- பார்வதி. பங்கினன் - பாகமாக உடையவன். தென் - அழகிய. தன்கடன் - அப்பெருமான் தன் கடமை. அடியேனையும் - அடியவனாகிய என்னையும். உம்மை இழிபுணர்த்திற்று. தாங்குதல் - காப்பாற்றுதல். என்கடன் - என்னுடைய கடமை. கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல் என்பது சிறிதும் இன்றி இருத்தல். |