|
பொ-ரை: அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை, பேரின்ப வடிவினனை, சிவலோக நாயகனை, ஞான உருவினனை, உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை, அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும், பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக்கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ? மறவேன். கு-ரை: தீர்த்தன் - தூயன். சிவன் - பேரின்ப வடிவினன். முதலாய ஒருவன் - `சத்தே முதற்கண் ஒன்றாய் அத்விதீயமாய் இருந்ததுழு என்னும் சாந்தோக்கிய உபநிடத உரைபற்றி எழுந்தது. தமக்குத் திருவருள் கூடாவண்ணம் தடுத்துப் பிறசமயம் புகுவித்த வினைக்கொடுமையைக் கருதிக் கொடியேன் என்றார். |