பாடல் எண் : 2 - 7
மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.
7
பொ-ரை:திருநீலகண்டனும், எட்டுத்தோளனும்,முக்கண்ணினனும், படம் கொண்ட பாம்பை அரையிற் கட்டிய பரமனும், திருமகள் உறையும் சிற்றம்பலத்தின்கண் எங்கள் ஐயனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை:மைகொள் கண்டன் - ஆலகால விடத்தை அடக்கினமையால் கறுத்த கழுத்தை உடையவன். பைகொள் பாம்பு-படத்தையுடைய பாம்பு. அரை-இடை, ஆர்த்த-கட்டிய. பரமன்-மேலானவன். செய்யமாது- செய்யாள், திருமகள். ஐயன்-தலைவன், அழகியன். நுண்ணியன். "நூலுணர்வுணரா நுண்ணியோன் அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க" (தி.8 திருவாச திருவண்) "வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்" (தி.8 திருவாச- சிவபுரா).