|
பொ-ரை: விண்ணிலுள்ள தேவர் வந்து பரவிப்போற்றித் தூய செம்பொன்னினால் முழுதும் எழுதி மேய்ந்த சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானை இழிவுடைய யான் மறந்து எங்ஙனம் உய்வன்? கு-ரை: தேவர்கள் முழுதும் எழுதிமேய்ந்த என மாறுக. தூய செம்பொன்-ஆடகம். கிளிச்சிறை, சாம்புநதம், சாதரூபம் என்பவற்றில் தூயதான கனகம். சிற்றம்பலம் பொன்னம்பலம் என்பது காலங்கடந்த பெயர் வழக்கு. ஆதலின் பராந்தக சோழன் போன்ற சோழ வேந்தர்கட்கு முன்பே தேவர்களால் பொன் வேயப்பட்டது என்பது அறியவேண்டுவதொன்று. முழுதும் எழுதி மேய்ந்த-கோயில் விமானம் முழுதும் பரப்பி வேயப்பட்ட. இழுதையேன்-குற்றமுடையவன்.வேய்ந்த-மேய்ந்த என்றாயது. |