பாடல் எண் : 20 - 10
பரப்பு நீரிலங் கைக்கிறை வன்அவன்
உரத்தி னாலடுக் கல்எடுக் கல்லுற
இரக்க மின்றி யிறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
10
பொ-ரை: நீர்ப்பரப்புச் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனாகிய இராவணன் தன் ஆற்றலினால் திருக்கயிலையை எடுக்கத் தொடங்க இரக்கமின்றிச் சிறிது விரலாற்றலையினை அரக்கினவன் இடம் கடம்பூர்க்கரக்கோயில்.
கு-ரை: பரப்புநீர் - பரவியநீர்; கடல், உரம் - வலிமை. அடுக்கல் - மலை. எடுக்கல்லுற - தூக்க. இறைவிரல் - காற்பெருவிரல். தலை - இராவணன் தலையை. அரக்கினான் - அழுத்தி நெரித்தான். அரக்கினான் இடம் என ஒரு சொல் வருவிக்க.