|
பொ-ரை: இல்லத்திற்கொள்ளும் கோலங்களும், இந்த இளமையுமாகிய அல்லற் கோலங்களை அறுத்துஉய்ய வல்லமை உடையீராவீர்; அதற்குக் கடம்பூர்நகர்ச் செல்வக் கோயிலாகிய கரக்கோயிலை விரைந்து சென்று அடைந்து தொழுவீர்களாக. கு-ரை: இல்லக்கோலம் - மனைவாழ்க்கையாகிய வேடம். மனைவி மக்கள் தாய்தந்தை சுற்றம் என்று கொண்டொழுகும் பந்தபாசமாம் தோற்றம். இந்த இளைமையும் - இப்பொழுது நமக்கு வாய்த்துள்ள இளமைத் தோற்றமும். அல்லற்கோலம் - துன்பத்தைத் தரும் தோற்றரவுகளாம். அறுத்து உய வல்லிரே - இவற்றைத் துண்டித்துக்கொண்டு உய்திபெற வல்லமையுடையீர் ஆவீர், பின்னையது செயின் என்றபடி இளமை இல்லக்கோலம் பூணத் துணையாய் நிற்றலின் இளமைக் கோலத்தையும் வெறுத்தார். ஒல்லை - விரைந்து. செல்வக்கோயில் - செல்வச் செழிப்புள்ள திருக்கோயில். நமக்கு அழியாச் செல்வமாகிய திருக்கோயில் எனினுமாம். "பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு" -குறள் 330என்னும் பொதுமறையின் பிரயோகமே இது. |