பாடல் எண் : 20 - 9
வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானா ருறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
9
பொ-ரை: திருநீறணிந்த மேனியவர்க்கெல்லாம் உள்ளத்தில் விளங்கும் தலைவனும் வெண்பிறை சூடிய சென்னியானும் ஆகிய பெருமான் உறைவிடம் கடம்பூரில் உள்ள கள்வன்சேர்ந்த கரக்கோயிலாகும்.
கு-ரை: வெள்ளைநீறு - பால்போன்ற வெள்ளிய திருநீறு. மேனியவர் - உடம்பை உடைய அடியார். உள்ளமாயபிரான் - மனத் தகத்து எழுந்தருளியிருக்கும் பெருமான். அடியார் எப்பொழுதும் அப்பெருமானையே எண்ணிக்கொண்டிருத்தலில் உள்ளமாயபிரான் என்றார். பிள்ளை வெண்பிறை - பிள்ளை மதியாகிய பிறை. கள்வன் - திருமால்; உள்ளங்கவர்கள்வன் எனக்கொள்ளின் சென்னியனும், கள்வனுமாகிய பிரானார் உறைவிடம் கடம்பூர்சேர் கரக்கோயில் எனமுடிக்க.