|
பொ-ரை: தென்னவனும், எனையாளும் சிவனும், மன்னவனும், மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகத்தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும், ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான். கு-ரை: தென்னவன் - அழகியவன். சிவனவன் - சிவன். மன்னவன் - தலைவன். மதி- மதித்தற்குரிய. அம் - அழகிய. மறை - வேதங்கள். முன்னம் மன்னவன் - உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்; வனம்சேர் பூழியான் - சுடலைப் பொடிபூசி. பூழி - விபூதி. இன்னம் இன்புற்ற - (இனன் - சூரியன்) சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் எய்தி மருவி இன்னம்பர் ஆயிற்று என்பர். |