பாடல் எண் : 21 - 9
விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமும்
திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே.
9
பொ-ரை: வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இளவேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன்,நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே.
கு-ரை: வெண்பிறை விரியும் தண்ணிள வேனிலில் என்க. வெண்பிறை விரியும் - வெள்ளிய பிறைமதி தோன்றும். தண் - குளிர்ந்த. இளவேனிலில் - இளவேனிற்காலத்து மாலை நேரத்தே. புரியும காமனை - காமத்தை விளைப்பவனாகிய மன்மதனை. வேவப் புருவமும் திரியும் - வெந்தழியப் புருவநெரிப்புச் செய்பவன், எல்லையில் - அழிவில்லாத; நெறிகடந்த எனினும் ஆம். நோக்கிய - பார்த்த.