பாடல் எண் : 22 - 1
பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
1
பொ-ரை: குடமூக்கிலே உள்ள பெருமான், பூவின் வண்ணத்தை உடையவன், புண்ணியமே வடிவானவன், அடியார்கள் ஆகும் வண்ணம் நண்ணி யருள்புரிந்து அடிமைச் சீட்டெழுதி ஆட்கொள்பவன், தீயின் நிறத்தை உடைய செம்மேனியில் திருநீறு பூசியவன், கோவண ஆடை உடையவன்.
கு-ரை: பூவணத்தவன் - பூவின் நிறத்தையும், தன்மையையும் ஒத்தவன். "பூவண்ணம் பூவின் மணம் போல" என்றபடி எங்கும் அருளொடு நிறைந்தவன் என்க. புண்ணியம் - புண்ணியமே வடிவானவன். "புண்ணியப்பொருளாய் நின்றான்". நண்ணி - விரும்பி. அடியார்களை அங்கு நண்ணி ஆவணத்துடையான் என்க. ஆவணத் துடையான் - "என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கெழுதிய ஆவணம்" (தி.10.திருமந்திரம்). ஆவணம் - அடிமைச் சாசனம். சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாற்றில் காணலாம். தீவணமெய்யில் திருநீறு பூசி என்க. தீவணமெய் - நெருப்பின் நிறம் போன்ற சிவந்த திருமேனி. தீவண்ண மெய்யில் திருநீறு பூசியதை நீறுபூத்த நெருப்போடு உவமிப்பர். ஓர் கோவணத் துடையான் - ஒற்றைக் கோவண ஆடையன். மேற்குத் திசையின் மூலையின் முடுக்கில் அமைந்த கோயிலாயிருந்தமை பற்றி வழங்கியது குடமுடுக்குக் கோயில் என்பது. பிரளய காலத்தில் சகல உயிர்களையும் அடைத்து வைத்த குடத்தின் மூக்கு இருந்த இடம் என்பது புராணம். குடமூக்கில் உள்ளான் என்க.