பாடல் எண் : 22 - 2
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.
2
பொ-ரை: உலகில் உள்ளவர்களே! நீர் பிறந்து வாளா திரிந்து இறந்து போகாமல், எல்லா உலகங்களையும் எரித்து சர்வசங்கார காலத்தில் ஆடும் இறைவனின் திறத்தைச் சிந்தையுள் இருத்துவீராக! வேர்வை தோன்றுமாறு விரைந்து ஆடிய காளியின் ஆடலை வெல்லுமாறு கூத்து ஆடிய பெருமான் குடமூக்கில் உறைபவன் ஆவான்.
கு-ரை: பூத்து ஆடி - இவ்வுலகில் தோன்றிப் பயனற்ற செயல்களைச் செய்து. கழியாதே - இறவாமல். பூமியீர் - நிலவுலகினராகிய நீவிர். தீத்தாடி - தீயின்கண் நின்று ஆடுபவன். தீர்த்து ஆடி எனப் பிரித்துப் பொருள் காணலுமாம். திறம் - தன்மையை. வைமின் - எண்ணி மனத்திலிருத்துங்கள். தன்னோடு போட்டியிட்ட காளியுடன் நடமாடி வென்றவன் என்ற வரலாற்றை உட்கொண்டவை பின் இரண்டு வரிகள். வேர்த்து - சீற்றங்கொண்டு. விசை - ஆடலின் வேகம். தீர்க என்று - முடிவடைவதாகுக என்று. கூத்தாடி - ஊர்த்துவ தாண்டவத்தை ஆடியவன். உறையும் - எளியனாய் உலகினர்வந்து வணங்கி அருள் பெறக் குடமூக்கில் எழுந்தருளியிருப்பவன் என்றவாறு.