பாடல் எண் : 22 - 5
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.
5
பொ-ரை: நல்ல நெஞ்சே! நீ, திக்குகளையே ஆடையாக உடைய தலைவனும் வக்கரையென்னும் திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை வணங்குவாயாக! அக்கு மாலையினையும், அரவினையும் அரையில் கட்டியவனும், கொக்கரையென்னும் பாடலையும் கூத்தயும் உடையவனுமாகிய பெருமான் குடமூக்கிலே உள்ளான்.
கு-ரை: நக்கரையன் - உடையில்லாதவன். வக்கரைஉறைவான் - திருவக்கரை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவன். நாடொறும் நன்னெஞ்சே நக்கரையனை வக்கரை உறைவானை நீ வணங்கு என்க. அக்கு - சங்குமணி. அரை - இடை. அரவு அரை என்பதற்குப் பாம்புகளின் அரசன் எனலுமாம் இடையிலே அக்குமணி கட்டியதோடு அரவையும் இடையின்கண் கட்டியவன் என்க. கொக்கரை - கொக்கிறகம்பூ, பாடல், ஒருவகை வாச்சியம்; மூன்றுள் ஏற்பன கொள்க.