|
பொ-ரை: பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம்குறவேடம் கொண்ட பெருமானும், குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக. கு-ரை: துறவி நெஞ்சினர் - அகப்பற்று புறப்பற்றை அடியோடு ஒழித்துத் துறவு எய்திய மனத்தை உடையவர். பித்தராய்ப் பிதற்றுமின் - ஈடுபாடுடையவராய்ப் பலவாறு அவன் புகழைச் சொல்லுங்கள். மறவனாய் - வீரனாய். பார்த்தன் - அருச்சுணன். கணை - அம்பு. தொட்ட - விடுத்த. குறவன் - கிராத வேடந்தாங்கி நின்றவன். குரவன் என்பது எதுகை நோக்கித் திரிந்ததெனலுமாம். அப்பொழுது மறவன் என்பதை வேடன் எனக் கொள்க. |