பாடல் எண் : 23 - 10
எளிய னாமொழி யாவிலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்றவல் லானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.
10
பொ-ரை: எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும்.
கு-ரை: எளியனாமொழியா - யாரிடத்தும்தான் எளியனாய் மொழிபயிலாத ; பிறரால் எளியன் என்று சொல்லப்படாத. இறை - தலைவன். களியினால் - மகிழ்ச்சி மயக்கத்தால். நெளிய - துன்பமுற அளியினால் - அன்பினால். அல்கும் - இல்லாமற்போகும்.