|
பொ-ரை: வேதங்களை ஓதுபவரும், விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய (அர்த்தநாரீசுவரரும்) எமது கள்வரே! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ? உரைத்தருள்வீராக. கு-ரை: வீதி - தெருவீதியின்கண். வேல்நெடுங்கண்ணியர் - வேல் போன்று கூரிய நீண்ட கண்களை உடைய தாருகாவனத்து முனிபன்னியர். வெள்வளை - சங்கு வளையல்களை. கொளற் பாலது நீதியே - கொள்வது முறையோ. காதலால் மெலிந்த பெண்களின் கைவளை சோரும் என்பது அகப்பொருள் இயல்பு. வெண்தோட்டராய் - வெண்மையான ஒளி செய்கின்ற தோடணிந்தவராய். காதில் குழைவைத்த - மற்றொரு காதில் குழையணிந்த. தோடு குழை என்பன மாதொருபாகராய இயல்பு குறித்தன. கள்வர் - பிச்சை கொள்ள வந்து வெள்வளையோடு உள்ளத்தைக் கொண்டவர் ஆதலால் எம் கள்வர் என்றார். |