பாடல் எண் : 23 - 9
அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.
9
பொ-ரை: நெஞ்சமே! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து. தேவர்கள் தொழ, தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை. நீ, அஞ்சியாயினும். அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக.
கு-ரை: அஞ்சியாகிலும் - அச்சம் கொண்டாவது. அன்பு பட்டாகிலும் - அன்பு கொண்டாவது. பயபக்தி இரண்டில் ஒன்றையேனும் கடைப்பிடித்து என்றபடி. வாழி முன்னிலையசை. நெஞ்சம் - மனமே; அண்மைவிளி. நின்றியூரை நீ நினை என்க. இஞ்சி - கோட்டை மதில். இஞ்சிமாமதில் இருபெயரொட்டு. கோட்டை, மதில் என்றபடி. எய்து - அழித்து. குஞ்சிவான்பிறை - தலையில் சூடிய இளைய அழகிய பிறை.