பாடல் எண் : 24 - 1
ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே.
1
பொ-ரை: ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும்; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும்; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றயூரைத் தொழ நம்வினைகள் ஓயும்.
கு-ரை: பாம்பும் மதியும் - தம்மிற் பகையாயினும் ஒளிமதி பாம்பினை ஒற்றி ஊரும் என்க. ஒற்றி - பொருந்தி. ஊரும் - ஊர்ந்து செல்லும். அப்பாம்பும் அதனை ஒற்றி ஊரும்.
ஒற்றி ஊரும் என்ற சொற்கூட்டுக்கு இங்கும் மேலதே பொருள். ஒற்றி ஊர - பாம்பும் மதியும் பற்றி ஊர்ந்து செல்ல. ஒரு - ஒப்பற்ற. ஓயும் - உள்ளதனிற் குறையும் (தொல் - சொல். 330).
உயிர்ப்பகை தீர்ப்பவன் என்பதில் உயிர்கட்குப் பகையாகிய ஆணவப்பகையின் வலியைப் போக்குவன் ஆதலின் தொழ வினை ஓயும் என்க.