|
பொ-ரை: மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க, பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிருளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர். கு-ரை: வாட்டம் ஒன்று -ஒரு வருத்தத்தை. மலையான் மகள் - பார்வதி, ஈண்டவே என்பது ஈட்டவே என வலித்தது. அணுகி - உடனாயிருக்கவே. ஆடி - ஆடுதலைச் செய்பவன். தன் கணவன் இருளிலே பேய்களோடு சுடலையாடுகிறான் என்பதால் உமை வருந்தியதாகக் கூறியது என்க. இடு பிணக்காடு - பிணங்களை இட்டுச்சுடும் காடு என்க. ஓரி - நரி. ஓடு - மண்டை ஓடு. ஒற்றியூரரே மலையான் மகள் வாட்டம் ஒன்று உரைக்கும் என்க. இடுகாட்டில் இட்ட பிணத்தை நரி கடித்துத்தின்ன அதனால் தசை கழிந்த மண்டை ஓடு என்க. வெண்தலை ஓட்டை என்று மாறுக. கை - கையின்கண்ணே உடைய. |