பாடல் எண் : 24 - 3
கூற்றுத் தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.
3
பொ-ரை: கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி, அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவ பிரானடியைக் குறிக்கொள்ளுவீராக! திருநீற்றினைப்பூசி வணங்கியெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த்தலத்து இறைவர்.
கு-ரை: கூற்றுத் தண்டம் - இயமவாதனை. உயிர்களுக்கு இயமன் விதிக்கும் தண்டனை. அஞ்சி - பயந்து. அறநெறிக் கண்ணதாகிய தண்டத்தினால் மிகை செய்வாரை அடக்கும் அரன். ஆற்றுத்தண்டத்தும் - இங்ஙனம் அடக்க இயலாத கூற்றுவன் சலந்தரன் முதலானோரை ஒறுத்தலினின்று உணர்க. குறிக்கொண்மின்- குறியாக்கிக் கொண்டு தொழுங்கள். ஆற்றுத் தண்டத்தால் அடக்கும் அரனடியைக் கூற்றுத்தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின் என்க. நீற்றுத்தண்டத்தராய் - நீற்றராய் தண்டத்தராய் என்று கொள்க. திருநீறணிந்து வணங்கித் தெண்டம் செய்பவராய். ஊற்றுத்தண்டு - கரும்பு ஊன்று கோல். இரட்டுற மொழிந்து கொள்க. வழுக்குழி உதவி, அணைந்துழிப் பேரின்பம் பயப்பர்.