பாடல் எண் : 25 - 1
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப்பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்தனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.
1
பொ-ரை: வரிசையாகிய அடர்ந்த செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த முதல்வர்; சிந்திப்பவர்களின் வினைகளைத் தீர்க்கும் செல்வர்; சந்திரனுக்கு அருள் செய்த தண்ணளியாளர்.
கு-ரை: முந்தி - தேவர்கள் முறையிட்ட ஒலியின் எதிரொலி அடங்குமுன். "மணியைக் கையால் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறிய தில்லையிப்பால் தீயாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே" கணை எய்யுமுன் எனலுமாம். மூவெயில் - திரிபுரம். தீர்த்திடும் - அழிக்கும். திரிபுரமெரித்த விரைவுபோல நினைக்குமுன் வினை தீர்ப்பான் என்க. அந்திக்கோன் - சந்திரன். ஏ - அசை. பந்திச்செஞ்சடை - வரிசையாய் முளைத்துச் சிவந்த சடை. பந்தி - கற்றை; பின்னல் என்ற பொருள்கட்கும் பொருந்தும் சொல்.