பாடல் எண் : 25 - 4
வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே.
4
பொ-ரை: நீண்ட அரவினைப் பற்றியாட்டும், இயல்பினர் ஆகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், வெற்றியூரில் உறையும் வேதியர், ஏற்றினை ஒற்றி உகந்து ஏறும் ஒப்பற்றவர், நெற்றிக் கண்ணினார்.
கு-ரை: வெற்றியூர் - தேவார வைப்புத்தலங்களில் ஒன்று. ஒற்றி - ஊர்ந்து, பொருந்தி, உகந்து எனலுமாம். ஒன்றி ஒற்றி ஆயிற்று எனக்கொண்டு ஒற்றை ஏறு என்றலும் ஒன்று. ஏறு - இடபம். ஏறும். எழுந்தருளும். பற்றி - பிடித்து.