பாடல் எண் : 25 - 6
பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகு மூரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினார் பாசூ ரடிகளே.
6
பொ-ரை: நிறைந்த திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப் பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர்; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன்; சொல்லுவீராக.
கு-ரை: பல்லில் ஓடு - பல இல்லங்களிலும், பல் இல்லாத மண்டையோடு எனலுமாம். பகலெலாம் ஓடு ஏந்தித் திரிவார் என்க. எல்லி நின்று - வெயிற்பொழுதில் ஓரிடத்தில் நின்று. இடுபெய்பலி - மண்டை ஓட்டில் இட்ட உணவை. ஏற்பவர் - ஏற்று உண்பவர். பல்கு - நிறைந்த. சொல்லிச் சென்று தங்கும் ஊர் இது என அறியேன். அறிவீராயின் சொல்லுங்கள். அகத்துறைப் பாடல் தலைவி அல்லது தோழி கூற்று. பல்குதல் - மிகுதல்.