பாடல் எண் : 26 - 10
நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்ன னிருபது தோளினை
மலங்க வூன்றிவைத் தர்வன்னி யூரரே.
10
பொ-ரை: வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முடிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னரின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்.
கு-ரை: நலங்கொள் - தனக்கு நன்மையே எண்ணுதலைக் கொண்ட பாகனை - இறைவன் மலை என்று கூறிய தேர்ப்பாகனை. நன்று - நன்கு; மிக. முனிந்திடா - சினந்து. விலங்கல் - கயிலைமலை. கோத்து எடுத்தான் - கைகளை உள்ளே நுழைத்துத் தூக்கியவன். அது மிக்கிட - அக்கயிலைமலை சுமையால் மிக. மலங்க - கலங்க. ஊன்றி வைத்தார் - ஊன்றினார்.