|
பொ-ரை: வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர். கு-ரை: பிறைகொள் வாணுதல் - பிறையின் வடிவத்தைக் கொண்ட ஒளி பொருந்திய நெற்றி. பெய்வளைத் தோளியர் - வளையல் அணிந்த கைகளை உடைய பெண்கள். நிறை - காப்பன காத்து, கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்; கற்பு என்பது. வெண் மழுவாளினர் - வெண்மையான மழுவாகிய வாளை உடையவர். மறைகொள் வாய்மொழியார் - மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட வாயை உடையவர். வாய்மொழி - வேதம். |