பாடல் எண் : 26 - 6
திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே.
6
பொ-ரை: வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்.
கு-ரை: திளைக்கும் - உண்டு மகிழும். தேன்படு - தேன்பொருந்திய. துளைக்கை வேழத்தர் தோலர் - துளையோடு கூடிய கையையுடைய யானையின் தோலை அணிந்தவர். சுடர்மதி முளைக்கும் - ஒளி பொருந்திய மதியிலிருந்து உண்டாகும். மூரல் கதிர் கண்டு - நகையொளிபோன்ற நிலாக்கிரணங்களைக் கண்டு. நாவளைக்கும் - அச்சந்திரனை உண்ணுதற்கு நாகம் நாவை வளைத்தற்கிடமாயுள்ள.