பாடல் எண் : 27 - 3
நெஞ்ச மென்பதோர் நீளகயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத்
தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே.
3
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவரே! நெஞ்சமாகிய ஆழமுடைய நீர் நிலைக்குள்ளே வஞ்சம் என்கின்ற தப்பவியலாத சுழியிலே நான்பட்டு இறக்கும் போது. தேவரீர் திருநாமமாகிய திருவைந்தெழுத்தும் தோன்ற அருள்வீராக.
கு-ரை: நெஞ்சும் என்பதோர் நீள்கயம் - மணமாகிய ஆழமான நீர்நிலை. வஞ்சம் என்பதோர் வான்சுழிப்பட்டு - வஞ்சனை என்பதொரு பெரிய சுழியின்கண் அகப்பட்டு. துஞ்சும் பொழுது - உணர்விழக்கும்போது, நின்னாமத் திருவெழுத்து அஞ்சும் - உன்னுடைய திருப்பெயராகிய திருவைந்தெழுத்து. தோன்ற - பொருள் நிலை உள்ளவாறு தோன்ற. அருளும் - அருள் செய்வீராக.