பாடல் எண் : 27 - 4
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாருமை யாறரே.
4
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் தம்மை நினைக்கின்றவர்தம் நெஞ்சில் உள்ளவர்; நீண்ட முப்புரங்கள் மூன்றையும் சுடர்விடுகின்ற அழல் உண்ணுமாறு எரியூட்டியவர். பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்துத் தம்திருமேனியிற் போர்த்தவர்; எல்லாப் பொருள்களினுள்ளும் கலந்து நிற்கும் இயல்பினர்.
கு-ரை: நினைக்கும் நெஞ்சினுள்ளார் - தன்னை நினைப்பவர்களது நெஞ்சிற்குள் வீற்றிருப்பவர். நெடுமாமதில் அனைத்தும் - நீண்ட பெரிய முப்புரங்கள் முழுவகையும். ஒள் அழல்வாய் - ஒளி பொருந்தியதாய் எரியும் நெருப்பினிடத்து. எரியூட்டினார் - எரியும்படி செய்தார் உரி - தோல். அனைத்து வாய்தல் உள்ளாரும் - எல்லாப் பொருள்களிடத்தும் பொருந்துதலை உடையவரும்.