|
பொ-ரை: ஐயாற்றில் எழுந்தருளும் இறைவர், பருப்பொருளாயவர். நுண்பொருளாயவர். பார்த்தற்கு அரியவர். அரியபாடலையும் ஆடலையும் உடையவர். கரிய கழுத்தினர் (திருநீலகண்டர்). பிறர்க்கெலாம் காண்டற்கு அரியவர். தொண்டருக்கோ எளியவர். கு-ரை: பரியர் - பருமையிற் பருமையர், நுண்ணியர் - நுண்மையின் நுண்ணியர். பார்த்தற்கரியவர் - பசு, பாச ஞானங்களால் அறிதற்கரியவர். அரிய பாடலர் - அருமையுடைத்தாகிய பாடல்களைப் பாடுபவர். ஆடலர் - நடனம் ஆடுபவர். பிறர்க்கெலாம் காட்சியரியர் - கரவாடும் வன்னெஞ்சராய பிறருக்கு அரியவர். தொண்டர்க்கு எளியர் - அன்புடைத் தொண்டர்களுக்கு எளியவர். |