பாடல் எண் : 27 - 6
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போது மிலாதது மன்றியும்
அலரும் போதும் அணியுமை யாறரே.
6
பொ-ரை: இருள்புலரும் காலைப் பொழுதிலும் சூரியன் மறையும் அந்திப்பொழுதிலும் இதழ்விரியும் மலர்களால் விதிமுறை தெரிந்தோர் சிலர் பணிய, அங்ஙனம் ஆகமவிதி அறியாதார் இறைவன் சூடும் மலரல்லாத மலர்களையும், இலைகளையும் கொண்டு அருச்சிக்க அவற்றையும் அணிவன் ஐயாறன்.
கு-ரை: புலரும்போது - காலை. இலாப்பட்ட பொற்சுடர்ப்போது - மாலை. போது என்பதனை இருவழியும் கூட்டுக. பொற்சுடர் - சூரியன். மலரும் போதுகளால் சிலர் பணிய என்க. மலர்கின்ற போதுகள் என உரை காண்க. இலரும் - அவ்வகையில் காலையும் மாலையும் மலரிட்டு வழிபடும் ஆற்றல் இல்லாதவரும் போதும் இலாததும் - மலராம் தன்மையில்லாதவற்றையும். அன்றியும் - அம்மலரன்றி இலைகளாலும்; அருச்சிக்க அதனை அலரும் போதுமாகக் கொள்ளும் ஐயாறன் என்க.