பாடல் எண் : 27 - 7
பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடுமை யாறரே.
7
பொ-ரை: இம் மங்கையைக் காதன்மை செய்தவர் இடப்பாகத்தே அழகிய மாலையணிந்த கூந்தலையுடைய பார்வதியைக் கொண்ட கங்கை மாலையர், அங்கமாலை முதலிவற்றைச் சூடும் ஐயாறர்.
கு-ரை: பங்கு அம்மாலைக் குழலியாகிய பார்வதியை உடையவர் பால்நிறக்கங்கையைக் காதன்மைசெய்யும் இயல்பினர். மங்கு ஐ மாலைமதி - ஒளிமங்கிய அந்திப் போதின்கண் தோன்றும் மதி எனப் பொருள் காண்க. அன்றியும் இம்மங்கையைக் காதன்மை செய்தவர் அம்மாலைக் குழலியைப் பங்கின்கண் உடைய கங்கை மாலையர் எனக் கூட்டுக. மாலை மதியம் - பிறை. அங்க மாலை - என்புமாலை.