|
பொ-ரை: பஞ்சகவ்வியங்களைத் திருவபிடேகம் கொண்டு ஆடுகின்றவனாகிய பெருமான் திருமுடியில் வானையளாவிய கங்கை பாய்வதைக் காண்பீராக; ஐயாறு புகுந்த அடியேனுக்கு அவன் இன்னருள் தேன் ஆறு திறந்து பாய்ந்தாற் போன்று தித்தித்திருக்கும். கு-ரை: ஆன்ஐ - பசுவிடத்தில் உண்டாகிய ஐந்து. பஞ்ச கவ்வியம். ஆறு என - ஆற்றுவெள்ளம்போல. ஆடுகின்றான் - அபிடேகம் கொள்பவன். முடி - அவனது திருமுடியை. வான் ஐ ஆறு - ஆகாயத் திடத்தே உண்டாகிய அழகிய கங்கை. வளாயது - சூழ்ந்திருப்பது. காண்மின் - காணுங்கள். நான் ஐயாறுபுக்கு அவன் இன்னருள் ஏற்க எனக்கூட்டுக. ஏற்க - அவனது இனிய அருளைக் கேட்டேனாக. தேனையாறு - தேனாறு. அவனது இன்னருள் வேண்டிநின்ற எனக்கு அவனது அருள் தேனாறு எனப் பெருகி ஓடி வந்தது என்க. |